கடற்றொழிலாளரிடம் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளை: ஒருவர் கைது
மன்னார் பள்ளிமுனை கடற்றொழிலாளரின் வாடியில் இருந்து திருடப்பட்ட படகு வெளியிணைப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கற்பிட்டியில் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பள்ளிமுனை கடற்றொழிலாளர் ஒருவரின் கடற்றொழில் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கடற்றொழில் உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றைய தினம்(30.09.2023) கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குறித்த கடற்றொழிலாளரின் வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கி இருந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த கடற்றொழில் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரம்(எஞ்சின்) உள்ளடங்களாக அட்டை பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த வாடியின் உரிமையாளர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதன் போது மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை பொருட்களை திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன்,அவர் திருடி விற்பனை செய்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு,மீட்கப்பட்ட பொருட்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |