உகாண்டாவில் முதலீடு செய்துள்ள இலங்கை தொழிலதிபர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
உகாண்டாவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் யோவேரி முசவேனி 71.65% வாக்குகளைப் பெற்று ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, இலங்கை மற்றும் உகாண்டா இடையிலான பொருளாதார உறவுகள் புதிய வேகமெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவின் நிலையான அரசியல் சூழல் காரணமாக, தற்போது 23 இலங்கை நிறுவனங்கள் வெற்றிகரமாக முதலீடு செய்து இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக, எரிசக்தித் துறையில் இலங்கை நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இலங்கை பங்களிப்பு
இலங்கை நிறுவனங்கள் உகாண்டாவின் பின்வரும் துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன,
1. உகண்டாவின் பல நீர்மின் நிலையங்கள் இலங்கை பொறியியலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் இலங்கை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
3. கட்டுமானம் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளில் இலங்கை நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.

தொழிலதிபர்களுக்கு வாய்ப்பு
இந்த நிலையில், முசவேனியின் நீண்டகால ஆட்சி முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக உகாண்டாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் வேலுப்பிள்ளை கனநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உகண்டா தற்போது எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கவுள்ளதாகவும், அதன் பொருளாதாரம் 6% - 7% வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், அங்கு இலங்கை தொழிலதிபர்களுக்கு இன்னும் விரிவான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதலீட்டுப் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு(PPP) திட்டங்கள் இலங்கை நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன என்றும் உகாண்டாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.