மாபியாக்களுடன் டீல் வைத்திருந்தால் நல்ல ஆளுநர் - வடக்கு ஆளுநர் ஆதங்கம்
மாபியாக்களுடன் 'டீல்' வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள்.
இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடும் இல்லாமல்
வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்: உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன.
அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள்.
மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தகுதியானவர்களுக்கு நியமனங்கள்
இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை. சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமன அனுமதிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விசேட முயற்சியால் பெற்றுத் தரப்பட்டன.
அத்துடன், இந்தச் செயன்முறையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர்.

நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், கடந்த கால அரசாங்கங்கள் நியமனங்களை வழங்காமல் அரச இயந்திரத்தைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்தன.
ஆனால், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், தகுதியானவர்களுக்கு நியமனங்களை வழங்கி அரச சேவையை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.