இலங்கையில் தீவிரமடையும் டெங்குதொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரிப்பு
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேகமாகப் பரவி வரும் டெங்கு
டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17 ஆயிரத்து 779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 665 நோயாளர்கள் கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44 ஆயிரத்து 359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக' சுகாதாரத் துறையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுவதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.