இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட தங்கம் இந்தியாவின் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப்படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று (03.02.2024) காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்த முற்பட்ட போது, அவர் வேகமாக தப்பி ஓடியுள்ளார். அதனையடுத்து, சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்துள்ளனர்.
அதன் பின்னர், வண்டியை சோதனை செய்த போது சுமார் 4.634 கிராம் எடையுள்ள 916 தங்கக் கட்டிகள் இருந்தமையும் அவை இலங்கை மதிப்பின்படி சுமார் 15 கோடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இராமேஸ்வரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலும், விசாரணைகளுக்கு பின்னர் நாளை சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |