பெண் ஒருவரை மிரட்டி பெருந்தொகை தங்கத்தை பறித்த இளைஞன்
நீர்கொழும்பில் பெண் ஒருவரை அச்சுறுத்தி தங்கப் நகைகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியே தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார்.
1,785,000 ரூபா பெறுமதியான தங்கத்தை பெண்ணிடம் இருந்து பலவந்தமாக எடுத்துக் கொண்டமை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நீர்கொழும்பு நகரிலுள்ள கடையொன்றில் தங்க நகையை சந்தேகநபர் விற்பனை செய்திருந்த நிலையில், தங்க நகையை உருக்கி கட்டியாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.