யுஎஸ்எய்ட் நிதி தொடர்பில் ஞானசார தேரரின் புதிய குற்றச்சாட்டு
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (யுஎஸ்எய்ட்) சர்ச்சைக்குரிய ஏழு அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளித்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர், தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆவண ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
சிங்கள பௌத்த சக்திகளின் உரிமைகளை நசுக்குவதற்காக, 2013 ஒக்டோபர் 1 முதல் 2014 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் ஒரு அமைப்புக்கு யுஎஸ்எய்ட் 8.1 மில்லியன் ரூபாய்களை (8,153,705) வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசு சாரா நிறுவனங்கள்
அத்துடன்,ஒகஸ்ட் 15, 2013 முதல் ஓகஸ்ட் 14, 2014 வரையிலான காலகட்டத்தில் மற்றொரு அமைப்புக்கு 5,979,940 நிலையான மானியம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது நிதி, தமது அமைப்பை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்த அரசு சாரா நிறுவனங்கள் பன்னிரண்டு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிதி யூடியூப் சேனல்களை உருவாக்கவும், செய்தித்தாள்களில் கட்டுரைகளை வெளியிடவும், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை பாதிக்கும் வகையில், சட்ட அமைப்பை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கையாளவும் பயன்படுத்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுபல சேனாவின் செயலாளர்
இந்தக் கூற்றுக்களை விசாரிக்குமாறு தற்போதைய அரசாங்கத்தை பொதுபல சேனாவின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
USAID நிதியைப் பயன்படுத்தி சில நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இதன் விளைவாக, இந்தத் தகவலை தாம் வெளிப்படுத்த முயன்றபோது தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றால், தாம் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |