ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்குழு நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் (Gnanasara thero) தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கு அமைய இலங்கையில் ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்குழு பொதுமக்களின் கருத்துக்களை பெற தீர்மானித்துள்ளது.
நிறுவனங்கள், குழுக்கள், நபர்கள் தம்முடைய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை ocol.consuktions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அஞ்சல் மூலமாகவும் யோசனைகளை அனுப்பி வைக்க முடியும். ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழு, அஞ்சல் பெட்டி எண் 504 கொழும்பு என்ற முகவரிக்கு அஞ்சல்களை அனுப்பி வைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் தமது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வழங்க முடியும் என செயலணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் கொண்டுள்ள கருத்துக்கள், யோசனை, நிலைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, அந்த எண்ணக்கருவை ஆராய்ந்த பின்னர், இலங்கைக்கே உரிய எண்ணக்கருவை கொண்ட வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமித்துள்ளார்.
