ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு! பிரதமர் ஹரிணியின் பதில்
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரிய நேரத்தில் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு
குறித்த விடயம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும், நீதித்துறை ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமாயின் நீதித்துறையின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொருத்தமான தீர்மானங்களை எடுப்பார் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாசாரம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி பதில்
இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இதற்கு முன்னரும் தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவை அவரது முடிவுகளுக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் சிறைச்சாலை உடையை அணிய வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டியில் இருந்து பௌத்த பிக்குகள் ஆரம்பித்த பேரணி, தற்போது அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையாக மாறியுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (15) கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளுக்குச் சென்றிருந்தார்.
இதன்போது, இரு பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்த அவர், அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பையும் அவர்களிடம் கையளித்தார்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை