எனது நெருங்கிய நண்பர் ஞானசாரர்.. இருந்தாலும் சட்டம் சமம்தான்! அமைச்சர் லால்காந்தா
கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தனிப்பட்ட நண்பர் என்றாலும், அந்த நட்பின் காரணமாக அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஆகிவிடமாட்டார் என்று அமைச்சர் கே.டி. லால்காந்தா கூறினார்.
ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர், பௌத்த பிக்குகளை அரசாங்கம் வேண்டுமென்றே குறிவைப்பதாகவோ அல்லது பௌத்த மதத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
"ஞானசார தேரரும் எனது நண்பர்தான். ஆனால் இந்நாட்டில் சட்டம் என்று ஒன்று உள்ளது. அந்தச் சட்டங்களை நாங்கள் உருவாக்கவில்லை; அவர் இந்த நிலைக்கு ஆளானதற்கும் நாங்கள் காரணமல்ல.
சட்ட நடவடிக்கை
முந்தைய அரசாங்கங்களின் காலத்திலும் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், அந்தப் பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல.

அரசியல் நோக்கங்களுக்காக ஞானசார தேரரின் விவகாரத்தை சில எதிர்க்குக் குழுக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக அப்பிக்கு பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் உள்ள ஏனைய பௌத்த பிக்குகள் தொடர்பில் ஏன் இத்தகைய கவலைகள் எழுப்பப்படவில்லை?
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஏற்கனவே இது குறித்து மூத்த பௌத்த மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார், சட்ட சீர்திருத்தங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பௌத்த துறவற ஆடையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதைத் தான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கின்றேன்.
சட்டத்தை மீறும் தனிநபர்கள் தகுந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டும், ஆனால் மதத் துறவற ஆடைக்கே தண்டனை அளிக்கப்படும் நிலை இருக்கக்கூடாது.
தனிப்பட்ட வழக்குகளுக்கு வெவ்வேறு விதிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதைய சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், அவை முறையான ஆலோசனைகள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.