அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அரசாங்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மருத்துவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம்
குறிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார காரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்ந்து வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு மருத்துவர்களை ஊக்குவிக்க கூடிய வகையிலான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலவச மருத்துவ சேவையை பாதுகாப்பானதாக பேண முடியும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவு
போதிய அளவு சம்பளங்கள் கிடைக்கப் பெறாவிட்டால் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு வீழ்ச்சி அடையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வூதிய கொடுப்பனவு, வெளிநாட்டில் உயர் கல்வியை தொடர்வதற்கான வசதிகளை அதிகரித்தல், சம்பளங்களை அதிகரித்தல், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை அதிகரித்தல், வரி சலுகைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மருத்துவர்கள் முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயங்களை சுட்டிக்காட்டும் வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.