உலகளாவிய இணையத்தடை : இலங்கை உட்பட்ட நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்
உலகளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட இணையத்தடை, இலங்கை உட்பட்ட பல நாடுகளின் விமான நிறுவனங்கள், ஆடைகள் மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களை ஸ்தம்பிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இணையப் பாதுகாப்பு வழங்குநரான CrowdStrike உலகளாவிய மைக்ரோசாஃப்ட் திட்டங்களை புதுப்பித்தபோது, உலகளாவிய ரீதியில் இந்த மிகப் பெரிய செயலிழப்பு ஏற்பட்டது
இந்தநிலையில், வாடிக்கையாளர்களை மீட்டெடுப்பதற்கு தாம் தீவிரமாக முயன்று வருவதாக மைக்ரோசாஃப்ட்டின் தெற்காசியா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை தரப்புக்கள்
இந்த செயலிழப்பு காரணமாக Mac மற்றும் Linux அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக இலங்கையில் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் இணையச்சேவைகளில் இடையூறுகளை எதிர்கொண்டது,
எனினும் அதன் சேவைகள் பிற்பகல் 2 மணியளவில் முழுமையாக மீட்டமைக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதனைத்தவிர, சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆடைத்துறையின் செயல்பாடுகளும் தடைப்பட்டன.
தன்னியக்க பணம் எடுக்கும் அமைப்புக்கள் (ATM), வங்கித்துறை மற்றும் இணைய வங்கி அமைப்புகள் போன்ற பல தனியார் வங்கிச் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தொழில்துறை தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான விமானங்கள்
இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் அடிப்படையில் எதையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் நாளை திங்கட்கிழமை மத்திய வங்கியுடன் இணைந்து, குறிப்பாக வங்கித் துறையில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடவுள்ளதாக முன்னணி தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த செயலிழப்பால், சர்வதேச ரீதியில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் பல்லாயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |