13 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம் - 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான நீதிமன்ற தீர்ப்பு..!
மட்டக்களப்பில் தனது 13 வயது மகளை இரண்டு வருடங்களாக தவறான நடத்தைக்கு உட்படுத்தி வந்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 75 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பூபாலப்பிள்ளை மாணிக்கம் என்பவர் கடந்த 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
13 வயதில் இழைக்கப்பட்ட அநீதி
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக பொலிஸார் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முதலாவது குற்றமாக, 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகவும், இரண்டாவது குற்றமாக அன்றைய தினம் வேறு நேரத்தில் மீண்டும் அதே குற்றத்தை செய்ததாகவும், மூன்றாவது குற்றமாக அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பிரபாகரன் தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி, திறந்த நீதிமன்றில் வாதங்களை முன்வைத்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த நிலையில், குறித்த நபர் கடந்த மாதம் 24ஆம் திகதி (24.08.2026) குற்றவாளியாக மன்றில் இனங்காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் திகதி அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது குற்றமான தனது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது குற்றமான 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை மீண்டும் தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.