இலங்கை வந்த ஜெர்மனிய சுற்றுலா பயணி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல்
களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று காலை 9:30 மணியளவில் ஹோட்டல் உணவகத்தில் அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரத்தக் கறை படிந்த பயணப் பை
இதில் அவரது வயிற்றில் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அளுத்கம பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எஸ். பிரதீப் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதன் போது 47 வயதான ஜெர்மன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரத்தக் கறை படிந்த பயணப் பை மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 22 அங்குல நீளமுள்ள கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காயமடைந்த முதியவர் உடனடியாக களுத்துறை நாகோடா போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.