புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும்
“2049இல் உலகின் சக்தி வாய்ந்த முதல்தர இராணுவமாகவும், முதல்தர நாடாகவும் சீனா திகழும்" என அண்மையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் குறிப்பிட்டு இருந்தார். அவ்வாறே 2019இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் "சீனாவுடன் மோதுவது என்பது 140 கோடி சீன இரும்புச் சுவர்களில் மோதுவதற்கு ஒப்பானது" எனவும் அன்று பேசி இருந்தார்.
இப்பிரகடனங்கள் இன்றைய புதிய தாராள பொருளியல் மையத்தில் அமெரிக்கா, சீனா என்ற இரண்டு அதிகார மையங்கள் தொழிற்படுவதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. இந்த இரண்டு அதிகார மையங்களும் கடல் ஆதிக்கத்தையும், உலகின் கேந்திரத் தன்மை வாய்ந்த தீவுகளை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை தமது கொள்கையாகக் கொண்டுள்ளன.
சீனா பெருநிலப் பரப்பிலிருந்து இருந்து 100 கிலோமீட்டர் தென் சீனக் கடலில் அமைந்துள்ள தாய்வான் தீவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முனைகிறது. தாய்வான் சீனாவுக்கு சொந்தமானது தான் என ஐ.நாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் தாய்வான் தன்னை தனித்துவமான அரசாகவும், ஒரு தனித் தேசியமாகவும் அதாவது சீன எதிர்ப்பு தேசியமாக வளர்த்து அரசமைத்து, பொருளியலிலும் பெரு வளர்ச்சியடைந்திருக்கிறது.
படையெடுக்க தாமதம்
எனவே தனித்துவமாக வளர்ச்சியடைத்திருக்கின்ற தாய்வானை பல பிரயோகத்தின் மூலம் ஆக்கிரமித்து கட்டுப்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும், ஜப்பானும், தென்கொரியாகவும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளன. அவை தாய்வானுக்கு பக்கபலமாகவும் நிற்கின்றன.
எனினும் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை கொண்ட சீனாவால் தாய்வானை ஆக்கிரமிக்க முடியாமைக்கு தாய்வான் தீவாக இருப்பதுவே காரணமாகும். அதாவது அதனுடைய புவிசார் அமைவிடமே காரணம். தீவு என்பது பாதுகாப்பு நோக்கில் அத்தீவில் இருப்பவனுக்கு எப்போதும் பலமானது.
தீவுக்கு வெளியிலிருந்து செல்லும் எந்த ஆக்கிரமிப்பாளனும் தீவை ஆக்கிரமிக்க முடியுமே தவிர அதனை மக்கள் ஆதரவு இன்றி தக்கவைக்கவோ, நிர்வகிக்கவோ முடியாது. அதுவேதான் சீனா தாய்வான் மீது படையெடுக்க தாமதம் அல்லது தயக்கம் காட்டுவதற்கான முதலாவது காரணமாகும்.
இரண்டாவது தாய்வானுடன் யுத்தம் ஏற்பட்டால் அந்த யுத்தம் அமெரிக்கா சார்ந்த மேற்குலகம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுடனும் போரிட நேரிடும்.
அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படுமானால் சீனாவின் 2049ஆம் ஆண்டு சீன அரசு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற போது உலகின் முதல்த்தர நாடாக சீனா திகழ வேண்டும் என்ற கனவு உடைந்து போய்விடும். அல்லது பின்தள்ளிப் போய்விடும்.
இந்நிலையில் சீனாவின் தேசிய அபிலாசைகளை அடைய முடியாமல் போய்விடும் என்ற அச்சம் சீன அரசுக்கு உண்டு. எனினும் இதனை எவ்வாறு சமப்படுத்தி கையாள்வது பற்றியே சீனா தற்போது சிந்திக்கிறது.
தேசிய நலன் சார் கொள்கை
இன்றைய சீனாவின் தேசிய அபிலாசை என்பது அல்லது தேசிய நலன் என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள மூலவளங்களை சூறையாடி, சுரண்டி தனது நாட்டுக்கு கொண்டு செல்வதும், அதை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பண்டங்களை உலகச் சந்தையில் பரப்புவதும்தான்.
இந்த சந்தை நலனைத்தான் அமெரிக்காவின் தேசிய நலனாகவும் சர்வதேச அரசியலாகவும் உள்ளது. இத்தகைய நலன்கள் தான் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் சர்வதேச அரசியலாகவும் அமைந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இது இந்தியாவுக்கும் பொருந்தும்.ஆனால் ரஷ்யாவுக்கு இது பொருந்தாது.
ரஷ்யாவை பொறுத்த அளவில் அது உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையும், மூல வளங்களையும் கொண்ட நாடு. அது தனது பிராந்தியத்துக்குள்ளே தனது செல்வாக்கை தொடர்ந்து பேணவும், தனது புவிசார் அரசியல் எல்லைகளை தொடர்ந்து பாதுகாப்பதுமே அதனுடைய தேசிய நலன் சார்ந்த கொள்கையாக இன்று கொண்டுள்ளது.
தீவு எப்போதும் தீவில் உள்ளவனுக்கு பலம் என்பதை அமெரிக்காவின் பக்கத்திலேயே அமைந்திருக்கின்ற கியூபா தீவு அமெரிக்காவிற்கு சவாலாகவே தொடர்ந்தும் நிலைத்திருக்கிறது.
அவ்வாறே இந்தியாவுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள இலங்கை தீவு கடந்த 2500 ஆண்டுகளாக உலகின் பேரரசுகளின் உள்வருகைக்குப் பிறகும் அது தனித்துவமாக தொடர்ந்து நிலைத்திருப்பது தீவாக இருப்பதனாலேயே என்பதை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பின் ஊடாக நிறுவ முடிகிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பு
இலங்கை தீவைப் பொறுத்தளவில் கி.மு 3ஆம் நூற்றாண்டில் வட இந்தியப் பேரரசர் அசோகன் இலங்கை தீவில் பௌத்த மதத்தை பரப்பி அதனூடாக பௌத்த மத பண்பாட்டுப் படையெடுப்பை செய்தார்.
அந்த பௌத்த மதத்தையே ஏற்று அதனை தமக்கு கேடயமாக இலங்கை அரசு பயன்படுத்தியது, இன்றும் அதனையே தனது பாதுகாப்பு கவசமாக கொண்டுள்ளது. அதற்குப் பின்னர் தொடர்ந்து இலங்கை தீவினுள்ளே படையெடுத்த தென்னிந்திய மன்னர்களான பாண்டியர்கள், சோழர்கள், சாவகர்கள் என்பவரை எவ்வாறு தென் இலங்கை அரசு கையாண்டது.
அவ்வாறே 15ஆம் நூற்றாண்டில் சீனாவின் 3 வருட ஆக்கிரமிப்பை எவ்வாறு கையாண்டது?.
அதனைத் தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேய படையெடுப்புகளை எல்லாம் லாவகமாக கையாண்டு சிங்கள பௌத்த அரச பாரம்பரீயத்தை அது தொடர்ந்து பேணி தற்காத்து இருக்கிறது என்பதை கடந்த 2500 ஆண்டு கால இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை அவதானித்தால் புரியும்.
இலங்கை தீவாக இருப்பதுதான் அது தன்னை தற்காத்துக் கொண்டிருப்பதற்கான பிரதான காரணமாகும்.
இலங்கைத் தீவு பிரதான இரண்டு தேசிய இனங்களைக் கொண்டுள்ளன. அளவால் பெரிய தேசிமான சிங்கள பௌத்தர்கள் அளவால் சிறிய தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கவும், தீவை விட்டு வெளியேற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளது.
அதனை நிறைவேற்றுவதற்கான மூலோபாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. இதற்கான தேவையை நிறைவேற்ற அது அமெரிக்காவையும் நாடுகிறது. மறுபுறத்தில் சீனாவையும் நாடுகிறது. இன்னொரு புறத்தில் இந்தியாவையும் அது தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
இந்திய எதிர்ப்பு
இங்கே இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாதம் மூன்று வேறுபட்ட சக்திகளை ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்தி தனது நலனை அடைவதற்கான இராஜதந்திர உத்தியைக் கைக்கொண்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தளவில் இந்திய தரையில் இருந்து வங்கக்கடலில் 1204 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தமான் தீவு இந்தியாவுக்கு சொந்தமாக இருக்கிறது. ஆனால் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கை தீவை தனது மேலாண்மைக்குள் கொண்டுவர முடியாமல் தொடர்ந்தும் திண்டாடுகிறது.
காரணம் இலங்கைத் தீவின் பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்திய விரோதம் என்ற அடித்தளத்தில் சிங்கள பௌத்த தேசியவாதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. சுருங்கக் கூறினால், சீன எதிர்ப்பு தேசிய வாதமே தாய்வான் மக்களிடம் வேரூன்றி பகைமையுடன் வளர்ச்சி அடைந்திருப்பது போலவே இலங்கை தீவிலும் இந்திய எதிர்ப்பு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இலங்கை அரசை பொறுத்த அளவில் அது தீவாக இருப்பதனால் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் இந்தியாவை எதிர்கொள்வதற்கும் இலகுவாக உள்ளது. இலங்கை தீவுக்குள் இலகுவில் யாரும் உள்நுழைய முடியாது.
சிறிய பாக்கு நீரிணையை கடந்து ஈழத் தமிழர்களுக்கான உதவிக்கரம் நீள்வதற்கான, வருவதற்கான வாய்ப்பு இருக்கின்ற போதிலும் அரசுக்கும் அரசுக்குமான உறவு என்ற அடிப்படையிலும் ஈழத் தமிழர் பிரச்சினையை இந்தியாவுடன் இணைத்து ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஒரு காலகட்டத்தில் ஆதரித்த இந்தியாவை ஈழத் தமிழர் தமிழர்களின் பகை நாடாக மாற்றியதன் மூலமும் இலங்கை ராஜதந்திரம் ஈழத் தமிழர் போராட்டத்தை தோற்கடித்து, முடக்குவதில் பெரு வெற்றி பெற்று இருக்கிறது.
அதாவது தனது முதலாவது எதிரியான இந்தியாவையும், இரண்டாவது எதிரியான ஈழத் தமிழரையும் ஒரு மேசையில் அமர்த்தி பேச வைத்து இருவரையும் ஒரே நேரத்தில் பகைவர்களாக்கி வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த வெற்றியின் அடித்தளத்திலிருந்துதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வெற்றியை அது சம்பாதித்து கொண்டுள்ளது.
இலங்கை தீவு
எனவே இந்தியா தனது புவிசார் அரசியலில் தன்னுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ள இலங்கை தீவை தன்னுடைய மேலாண்மைக்குள் அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறாயின் இலங்கை தீவுக்குள் தனக்கு ஒரு ஆதரவு சக்தி இருந்தால் மாத்திரமே இந்தியாவினால் இலங்கையை கட்டுப்படுத்த முடியும்.
அதற்கான வாய்ப்புகள் ஈழத் தமிழர் என்ற வடிவில் இந்தியாவிற்கு எப்போதும் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் இலங்கை தீவுக்குள் தொடர்ந்து வாழ்ந்து நிலைத்திருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியமானது.
இரண்டாவது ஈழத் தமிழர் இந்தியாவின் பக்கம் அல்லது இந்திய ஆதரவு தளத்தில் இருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியமானது.
இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்ற போது அவர்களுக்கு இந்திய அரசோ அல்லது மேற்குலகமோ கை கொடுக்க முன்வரா விட்டால் இறுதிக்கட்டத்தில் ஈழத் தமிழர்கள் தங்கள் எதிரிகளான சிங்கள பௌத்தத்தின் காலடியில் சரணடை வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு ஈழத் தமிழர்கள் தமது எதிரிகளிடம் சரணடைந்தால் இலங்கை அரசு முற்று முழுதாக சீனச் சார்பாக மாறிவிடும்.
அவ்வாறான ஒரு நிலையில் இந்தியாவின் புவிசார் அரசியல் மேலாண்மை என்பது சீனாவுக்கும் தாய்வானுக்குமான தொடர் பகை நிலையைப் போன்ற ஒரு தோற்றத்தையே பெறும். இந்து சமுத்திரத்திலும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான நிரந்தர பகை நிலையையே தோற்றுவிக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.