அவசரமாக இந்தியா சென்ற புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் துவான் சலே, அவசரமாக இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் எந்த உத்தியோகபூர்வ பணியின் நிமித்தம் அவர் சென்றார் என்பது தெளிவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்கல் சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சாரா (புலஸ்தினி மகேந்திரன்)ஜெஸ்மினின் மரபணு பரிசோதனை மீண்டும் நடத்தப்பட உள்ள பின்னணியில் சுரேஷ் சலே இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
சுரேஷ் துவான் சலேவுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தி வருகிறார்.
அத்துடன் சுரேஷ் சலே இந்த தாக்குதல் தொடர்பான விடயங்களை முதலில் மலேசியாவிலும் பின்னர் இந்தியாவில் இருந்தும் கையாண்டதாக மனுஷ கூறியிருந்தார்.
அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஹஸ்தூன் என்பவரது மனைவியான சாரா ஜெஸ்மின் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை அடிப்படையாக கொண்டு, ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



