ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு இல்லையென்றால் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி : கஸ்ஸப தேரர் எச்சரிக்கை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க மறுத்தால், புதிய ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என பலங்கொட கஸ்ஸப தேரர் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை (அக்டோபர் 17) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகப் போராட்டக் களத்திற்கு திரும்பிய அவர், ஊடகங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.
அதிகாரம் ஜனாதிபதியிடம்..
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்வதே தங்களின் முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது என்றும், ஞானசார தேரரை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும்,ஜனாதிபதி பிடிவாதமாகச் செயற்பட்டால், ஞானசார தேரரை விடுவிப்பதற்காகவே புதிய ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், ஞானசார தேரர் சிறையில் துயரப்படும்போது தாம் வசதிகளை அனுபவிக்க விரும்பவில்லை எனக் கூறி, போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக மீண்டும் வந்துள்ளதாகக் கூறினார்.
முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிக்குகள் வெளியேறினால் சிங்கள மக்களும் வெளியேறலாம் - நினைவுபடுத்தப்படும் ஜுலை கலவரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை