உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வௌியாகியுள்ள நிலையில் கலைப்பிரிவில் வவுனியா (Vavuniya) - அல் அக்ஸா மகாவித்தியாலயத்தின் நசுர்தீன் நசுரா பேகம் என்னும் மாணவி மாவட்ட ரீதியில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி, கலைப்பிரிவில் தமிழ், புவியியல், அரசியல் ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நசுர்தீன் நசுரா பேகம், எனது கிராமத்தின் முதல் சட்டத்தரணி ஆக வேண்டும் என்பதே எனது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.
தனது இலக்கு
மேலும் அவர், "வவுனியா, அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று நான் 3ஏ பெற்று கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 75ஆவது இடத்தையும் பெற்றுள்ளேன்.
எனது ஊர் பாடசாலையின் பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தால் தான் நான் பாடசாலை மாறாது கலைப்பிரிவில் இங்கு கற்றேன். என்னுடைய தந்தை கூலித் தொழிலாளி தான்.
நான் அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்து முன்னேற வேண்டும் என படித்தேன். எனது அம்மாவும் எனக்கு ஆதரவு தந்திருந்தார்.
அது மாத்திரமன்றி, எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
மேலும், எனது கிராமத்தில் இருந்து உள்வாரியாக முதலாவது சட்டத்தரணியாக வர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. அதற்காக கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு
அதேவேளை, வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் விசுவமடு மகா வித்தியாலய மாணவன் ஜீவகன் லிதுர்சன் விஞ்ஞானப் பிரிவில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், வித்தியானந்தா கல்லூரி மாணவன் கோரேஸ் டிலான் இறையின்பன் போல் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |