க.பொ.த (சா/த) பெறுபேறுகளில் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயம் முதலிடம்
அண்மையில் வெளியிடப்பட்ட 2025 (2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் அக்கரைப்பற்று கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இம்முறை கிழக்கு மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42 வீதம் ஆகப் பதிவாகியுள்ளது. இம்மாகாணத்தில் கணிதம் அல்லது தமிழ் மொழியுடன் ஆகக்குறைந்தது 3C, 2S சித்திகளைப் பெற்றவர்களே சித்தியடைந்தவர்களாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று வலயம் 85.4 வீத சித்தியை பெற்று மாகாணத்தில் முதலிடத்தை சுவீகரித்துள்ளது. இவ்வலயத்தில் 55 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பெறுபேறுகளின் தரவரிசை
கல்முனை வலயம் 84.5 சித்தி வீதத்துடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. எனினும், மாகாணத்திலேயே ஆகக்கூடுதலாக இவ்வலயத்தைச் சேர்ந்த 129 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். திருக்கோவில் வலயம் 83.5 வீத சித்தி வீதத்தைப் பெற்று மூன்றாமிடத்தைத் தனதாக்கியுள்ளது.

இங்கு 33 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்திகளைப் பெற்றுள்ளனர். பரீட்சை பெறுபேறுகளின் தரவரிசையில் மட்டக்களப்பு மத்திய வலயம் நான்காம் இடத்தையும், மட்டக்களப்பு வலயம் ஐந்தாம் இடத்தையும், மட்டக்களப்பு மேற்கு வலயம் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் திருகோணமலை கல்வி வலயம் 65.1 சித்தி வீதத்தைப் பெற்று 17 வது (இறுதி) இடத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் 77.79 வீத சித்திகளையும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78 வீத சித்திகளையும், திருகோணமலை மாவட்டம் 66.59 வீத சித்தர்களே பெற்றுக் கொண்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் சேர்த்து மொத்தம் 760 மாணவர்கள் சகல பாடங்களிலும் 'A' சித்திகளைப் பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அதேவேளை, மாகாணம் முழுவதும் 305 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'W' (அசித்தி) சித்திகளைப் பெற்றுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.