மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, அம்பிட்டிய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவர் (26) இரவு தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தனது தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் அசமந்தம்
குறித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை என மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அம்பிட்டிய பிரதேசத்தை அச்சுறுத்தும் கும்பலொன்று இந்த கொடூர செயலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதேசவாசிகள், குறித்த கும்பலுக்கு பயந்து மாணவனின் குடும்பத்தினர் தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பியோட்டம்
இந்த கும்பல் ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும், தகவல் கொடுப்பவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸார் கும்பலுக்கு தெரிவிப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேற்படி குற்றத்தை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் ஒருவர் சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், எனினும் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.