க.பொ.த சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளை மீளவும் ஒத்திவைப்பது குறித்து கவனம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை மீளவும் ஒத்திவைப்பது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கும் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப்பரீட்சையை ஜனவரி மாதம் நடத்துவதற்கும் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்க்பபட்டுள்ளதால் இந்த திகதிகளில் மீளவும் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இணைய வழி கற்கை நெறிகளின் மூலம் எல்லா பிரதேசங்களுக்கும் நிறைவானதும், சம அளவிலானதும் வளங்கள் இன்மையினால், உரிய தினத்தில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காண்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நிச்சயமான திகதிகளை அறிவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பரீட்சைகளை எப்போது நடத்த முடியும் என்பது குறித்து திடமான அறிவிப்புக்களை தற்போதைக்கு மேற்கொள்ள முடியாது எனவும் கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.