காசா சுரங்க பாதைகள் மக்களுக்காக அல்ல: வீரர்களுக்கானது- ஹமாஸின் அதிரடி அறிவிப்பு
காசாவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர பொதுமக்களுக்கு அல்ல என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காசாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போர் மூன்று வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
போரின் இரண்டாவது கட்டமாக, காசாவின் முக்கிய எல்லையில் நுழைந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள்
காசா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 8,300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,457 பேர் சிறுவர்கள் எனவும் எஞ்சியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், முதியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் பேசிய ஹமாஸ் படையைச் சேர்ந்த மெளசா அபு மார்ஸோக், தங்களின் இஸ்லாமியக் குழுவுக்கு சுரங்கப்பாதை அல்லது பதுங்குக் குழியினுள் இருந்து தாக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. காசா மக்களைக் காக்க வேண்டியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொறுப்பு.
இலக்குகளிலிருந்து தப்பவும், எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் மட்டுமே சுரங்கப் பாதைகளை உருவாக்கியுள்ளோம். வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இது மட்டுமே வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.