விரிவாக்கப்பட்ட தாக்குதல்! ட்ரம்பின் வருகையால் அதிரப்போகும் காசா மண்
காசா பகுதியைக் கைப்பற்றுவது மற்றும் உதவிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, பாலஸ்தீன அமைப்பான ஹமாஸுக்கு எதிரான விரிவாக்கப்பட்ட தாக்குதல் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஹமாஸுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல வாரங்களாக முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் குறித்த முடிவை நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நெதன்யாகு
இந்நிலையில் காசாவில் உள்ள அதிகமான பாலஸ்தீனியர்கள் "தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக" இடம்பெயரக்கூடும் எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவிற்கு வெளியே உள்ள படைகளால் குறுகிய கால தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்ட முந்தைய தந்திரோபாயங்களை இஸ்ரேலிய துருப்புக்கள் பின்பற்றாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், சர்வதேச உதவி குழுக்கள் மற்றும் ஐ.நா. அமைப்புகளால் கையாளப்பட்டு வரும் உதவி விநியோகம், தாக்குதல் தொடங்கியதும், தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு, ரஃபாவின் தெற்குப் பகுதியில் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம்
மேலும், போர் முழுவதும் காசாவை ஆக்கிரமிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத இஸ்ரேலிய இராணுவம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த முடிவு, உள்நாட்டில் குறைந்து வரும் பொதுமக்களின் ஆதரவுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு போர் முடிவின்றி தொடரக்கூடும் என்ற அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |