இஸ்ரேலின் தடையால் தவிக்கும் காசா நோயாளிகள்
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்திற்கு முன்பாகப் ஏராளமான பாலஸ்தீன நோயாளிகள் ஒன்றுதிரண்டு தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற அனுமதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு பெண், "எனது மகள்களின் நலனுக்காக நான் சிகிச்சை பெறச் செல்ல அனுமதிக்க வேண்டும். நான் பொழுதுபோக்கிற்காக வெளியே செல்லவில்லை; என் கழுத்தில் புதிய கட்டிகள் தோன்றியுள்ளதால் நான் பயந்துபோயுள்ளேன், எனக்கு அவசரமாகச் சிகிச்சை தேவை" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீன நோயாளிகள் போராட்டம்
மற்றொரு பெண்ணோ, "நாங்கள் பாலஸ்தீனியர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே புற்றுநோயால் இறந்து கொண்டிருக்கிறோம், இதில் எங்கள் தவறு என்ன?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 2025-ல் காசாவில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட "போர்நிறுத்தத்தைத்" தொடர்ந்து சில எல்லைக் கடப்புகள் சுருக்கமாகத் திறக்கப்பட்டன.

ஆனால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி 28 அன்று இஸ்ரேல் காசாவின் எல்லைக் கடப்புகளை முற்றிலுமாக மூடியுள்ளது.
எல்லை திறக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் ஒருசில நோயாளிகள் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்ல முடிந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காகக் காத்திருப்புப் பட்டியலில் தவித்து வருகின்றனர்.
ஒக்டோபர் 2023 முதல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரின் காரணமாக, எகிப்துடன் இணையும் காசாவின் முக்கிய நுழைவாயிலான ரஃபா எல்லைக் கடப்பும் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.