இலங்கையின் கடந்தகால மீறல்கள் மறக்கப்படமுடியாதவை: கனடா பகிரங்கம்
இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
Construction has officially begun on the Tamil Genocide Monument in Brampton, a powerful symbol of our collective resolve and enduring strength. Canada made history as the first national parliament to recognize May 18th as Tamil Genocide Remembrance Day. pic.twitter.com/hYkPcYTlz4
— Gary Anandasangaree (@gary_srp) August 15, 2024
கெரி ஆனந்த சங்கரி
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி,
“எமது கூட்டிணைவு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றுக்கான வலுவான அடையாளமாகத் திகழக்கூடியவகையில் பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய நாடாளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நோக்கில் இந்நினைவுத்தூபி நிர்மாண நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்காக கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகக் பிரம்டன் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரிய மனிதப்புதைகுழி
இலங்கை அரசாங்கத்தினால் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் அத்துமீறப்பட்டனர்.
கிராமங்கள் பாரிய மனிதப்புதைகுழிகளாக மாற்றப்பட்டன. இனப்படுகொலை அரசாங்கத்தினால் காவு வாங்கப்பட்ட இந்த அப்பாவி உயிர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் பிரம்டன் தனதுபதிவில் தெரிவித்திருந்தார்.
தமிழர்களின் கனடாவுக்கான பயணம் என்பது எமது தேசிய கதையின் ஓரங்கமாகும்.
இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டைவிட்டு வெளியேறிய தமிழர்களுக்கு ப்ரையன் மல்ரொனி தலைமையிலான அரசாங்கம் கனடாவின் கதவுகளைத் திறந்துவிட்டது.
அதேபோன்று ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசாங்கம் இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாயக்கூட்டத்தொடரைப் புறக்கணித்தது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |