மக்கள் வாழும் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி ஒன்றில் கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை நாட்டப்பட்டு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுநாளே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டம்
'இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்', 'ஹட்டன் குப்பைகளை ஹட்டனிலேயே கொட்டுங்கள்', 'ஹட்டன் குப்பை எங்களுக்கு வேண்டாம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று, குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு சென்று கையாளுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ஒன்று கூடி, தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிப்பதாவது: இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள். நாட்டின் பொருளாதாரத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக உழைத்து வருகின்றனர்.
கோரிக்கை
எனினும், மக்கள் வாழும் இந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில், தற்போது அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும், குப்பை மீள்சுழற்சி திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தினர்.
மக்கள் வாழும் இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்' என தெரிவித்தனர்.

ஹட்டன் நகரின் குப்பைகளை அகற்றுவதற்காக மக்கள் குடியிருப்புகள் இல்லாத பல இடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் பொருத்தமான ஒரு இடத்தை தெரிவுசெய்து குப்பை முகாமைத்துவத் திட்டத்தை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, குறித்த திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல், குடிநீர் பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினை குறித்து தலையிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.