புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை
முழு நாட்டையும் உலுக்கும் வகையில் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையானது தேசிய பதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதென பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் இன்றைய தினம் (19.02.2025) பாதாள உலக குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம், அனைவரின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
புதுக்கடை நீதிமன்றம், அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட மற்றும் மிக முக்கியமான நபராக இருப்பினும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உள் நுழைய அனுமதிக்கும் ஒரு இடம்.
இருப்பினும், அங்கு இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது, அவ்வளவு சாதாரணமான ஒரு விடயமல்ல. இது நாடளாவிய ரீதியில் ஒரு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்று.
தேசிய பாதுகாப்பு தொடர்பான கவனயீனத்தால் ஏற்பட்ட விளைவுகளை கடந்த 2019ஆம் ஆண்டு நாங்கள் அனுபவித்திருக்கின்றோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் அத்தனை எளிதில் மறந்து விடக்கூடிய ஒரு சம்பவங்கள் அல்ல.
பல உயிர்களை காவு கொண்ட அச்சம்பவத்திற்கு பிறகு நாட்டினதும் நாட்டு மக்களினதும், பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதொன்றாக கவனிக்கப்பட வேண்டியிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இருப்பினும், பாதுகாப்புத் துறை, இதனை நிறைவேற்ற தவறி விட்டதா அல்லது சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டதா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
அதேவேளை, நாட்டின் இராணுவ, பொலிஸ் மற்றும் விசேட படையினர், என முழு பாதுகாப்புக்களும் அடங்கிய ஒரு பொது இடமான நீதி மன்ற வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை இன்னுமே பலத்த விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
இந்தநிலைமை பாதுகாப்புத் துறையின் அசமந்த போக்கா அல்லது பாதுகாப்புத் துறை தொடர்பான புதிய அரசாங்கத்தின் கவனயீம் மற்றும் பாதுகாப்புத் துறைசார் விடயங்களில் இது வரை மக்களின் தேவை குறித்து சிறந்த திட்டமிடல்களை அரசாங்கத்தினர் முன்னெடுக்கவில்லையா என்பது உற்று நோக்கப்பட வேண்டிய விடயம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இச்சம்பவங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை நீதியமைச்சு அறிவித்திருந்தது.
தொடர் சம்பவங்கள்
இதனை தொடர்ந்து, ஊரடங்குச்சட்டம், பொது இடங்களில் விசேட படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பன பலத்த அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேசமயம், நாட்டை உலுக்கிய பல்வேறு கொலைச் சம்பவங்கள், பாதாள உலகக் குழுக்களின் அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்பன பல்வேறு தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வாறான பின்னணியில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.
நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது இது முதன்முறை அல்ல, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் சிந்தக அமரசிங்க என்ற ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில், அவரது சகோதரர் தம்மிக்க அமரசிங்க, படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள், நீதிமன்ற சுற்றுச் சூழலுக்குள் பல துப்பாக்கிச் சூடு மற்றும் பல குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், தற்போது, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பலின் தலைவருமான "கணேமுல்ல சஞ்சீவ" எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சட்ட புத்தகம்
இந்த கொலை தாக்குதலை மேற்கொண்ட நபர், வழக்கறிஞர் வேடத்தில் நீதிமன்றத்தில் உள்நுழைந்துள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, ஒரு புத்தகத்திற்குள், துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்கள் வெட்டப்பட்டு அதனுள் மறைத்தபடியே நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், துப்பாக்கிதாரி இந்த தந்திரோபாய தாக்குதலிற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, சந்தேக நபர் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உண்மையில் ஒரு சினிமா பாணியில் இடம்பெற்ற திட்டமிட்ட கொலை சம்பவம் என்றும் கூட சொல்லலாம்.
மேலும், கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாகவும் அவரும் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் வந்துள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்
வரவு - செலவுத் திட்டம்
இந்நிலையில், இந்த சம்பம் குறித்தும் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்தும் வினவப்பட்ட போதிலும், பாதுகாப்பு அமைச்சு தரப்பிலிருந்து தெளிவான பதில்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இது சாதாரண மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்குகின்றது.
இலங்கையர்கள் யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்லமுடியும் என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறிய சிறிது நேரத்தில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு விவகாரமானது தற்போதைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான போக்கை எடுத்துக்காட்டுவதாாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சபையில் தெரிவித்துள்ளார்.
அது தவிர எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தை கேள்வி எழுப்புகின்றன.
மேலும், அனைத்து பாதுகாப்புக்களும் அடங்கிய நீதிமன்ற வளாகத்திலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதெனின் சாதாரண வாழ்க்கை வாழும் மக்களின் பாதுகாப்பின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
எனவே, இவ்வறானதொரு நிலையை போக்க தற்போது தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆகையால், இது தொடர்பில் நீதியமைச்சு உரிய மற்றும் உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டையும் எட்ட வேண்டியது அவசியம் என்பதுடன் அதுவே நாட்டின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற ஒரு விடயம் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தமையும் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே இது, புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 19 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.