பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்குத் தொடுக்குமாறு கோரிய நீதவான் திடீர் இடமாற்றம்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரரத்னவிற்கு எதிராக வழக்குத் தொடருமாறு கோரிய நீதவான் பந்துல குணரட்ன, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் பந்துல குணரட்ன கோரியிருந்தார்.
நீதவான் பண்டார குணரட்ன, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதவான் திடீர் இடமாற்றம்
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதுடன், நீதித்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரிடம் நீதவான் பந்துல குணரட்ன அண்மையில் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னதாக, நிரபராதிகளான பொதுமக்கள் மீது தேவையற்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் எனப் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு இதே நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்தே பொலிஸ் மா அதிபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நீதவான் தீர்மானித்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

இதனிடையே, நீதவான் பந்துல குணரத்னவுக்கு எதிராகப் பொலிஸ் மா அதிபரும் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
அதனடிப்படையில், நீதவானிடம் ஆணைக்குழு விளக்கங்களைக் கேட்டிருந்தது. நீதவான் தமது விளக்கக் குறிப்பை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சிறிது நேரத்திலேயே இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, என்ன காரணத்திற்காக நீதவானுக்கு இந்த திடீர் இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சஜித்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
YOU MAY LIKE THIS VIDEO