அரசாங்கத்திற்கு எதிராக வலுப்பெறும் காலி முகத்திடல் போராட்டம் (Videos)
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தில் இன்றும் பல தரப்பினர் இணைந்து கொண்டுள்ளனர்.
இப் போராட்டத்தில் தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பணிப்புரியும் ஊழியர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அனைத்து பல்கலைக்கழக வைத்திய பிரிவு மாணவர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் ஈடுபடுவோரும் காலி முகத்திடல் நோக்கி பேரணியாக வந்து இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தற்போது அப் பகுதியுடனான போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப் போராட்டகளத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் யுவதிகள் வந்து போராட்டத்தில் இணைந்துகொண்டிருப்பதுடன், இவர்கள் தங்களுக்கான உணவுகளையும் இப் போராட்ட களத்திலே தயார் செய்து கொள்கின்றனர்.
அத்துடன் அனைத்து போராட்டகாரர்களுக்கு உணவுகளை தயாரித்து வழங்கி வருகின்றனர். நாட்டில் எரிவாயு கொள்கலன்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் நிலையில் போராட்டக்காரர்கள் விறகு அடுப்புக்களை பயன்படுத்தி இவர்களுக்கான உணவுகளை தயாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி, கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
“கோட்டா கோ ஹோம்” என்னும் கோசங்களை எழுப்பி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன்,
இப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ச்சியாக தங்களது ஆதவை வழங்கிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




