காலிமுகத்திடல் போராட்டம் அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிக்காட்டும் : வேலன் சுவாமிகள்
காலிமுகத்திடல் போராட்டத்தினால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்களுடைய போராட்டத்துக்கான நியாயத்தைக் கூட ஒரு பகுதியினராலாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை வரும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழிச்சி இயக்கத்தினுடைய இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் எமது சக்கர வியூகம் நிகழ்வில் அவரிடம் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
''நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகிறார்கள். அதனை நாங்கள் உணருகிறோம், ஏனெனில் இதை விட அதிக வேதனைகளை உணர்ந்தவர்கள்.
அதேநேரம் இந்த சிங்கள பேரினவாத அரசு மக்களை எவ்வாறு இவ்வளவு காலமும் ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கின்றது, மற்றும் இனவாதத்தை வெறுமனே கக்கி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் எவ்வாறு நடந்திருக்கிறார்கள், எவ்வாறு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதை இந்த போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் சிங்கள சகோதரர்கள் மத்தியிலே ஒரு விழிப்புணர்வு ஏற்படும் அல்லது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது, அல்லது ஏற்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆகவே தான் அந்த மனநிலை அவர்களுக்கு வருமாக இருந்தால் நிச்சயமாக எங்களுடைய போராட்டத்துக்கான நியாயத்தைக் கூட ஒரு பகுதியினராலாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை வரும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



