பொலிஸாரின் தடைகளை தாண்டி காலி முகத்திடலை அடைந்த பல்கலை மாணவர்கள் (video)
பொலிஸாரின் பல தடைகளைத் தாண்டி பல்கலைக்கழ மாணவர்கள் குழு இன்று மாலை கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தை வந்தடைந்தது.
தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கொழும்பு காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த பல நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக பல கிளை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று காலி முகத்திடலை அடைவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் வீதித்தடைகளை அமைத்திருந்தனர்.
இதன் காரணமாக பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மகிந்தவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொண்டதில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வேறு வழியாக பேரணியாகச் சென்று தற்போது கொழும்பு காலி முகத்திடலை அடைந்துள்ளனர்.



