நாட்டில் தொடரும் போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்புலன்ஸ்கள், பாடசாலை வேன்கள், அலுவலக சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அமைதியான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமையை அங்கீகரித்துள்ளது.
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை வழமை போன்று பேணப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதோடு சில சமயங்களில் அம்புலன்ஸ்கள், பாடசாலை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, உரிய எதிர்ப்பாளர்களுடன் கலந்துரையாடி, பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி வழங்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறு அமைச்சர் மேலும் பணித்துள்ளார்.



