அரச ஆதரவு குழு நுழையலாம்..! காலிமுகத்திடல் பகுதியில் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் (Video)
அரசாங்கத்திற்கு ஆதரவான ஏதேனும் குழுவொன்று காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் நிலைமையை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என அப்பகுதியில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைவரும் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன், ஒற்றுமையாக விழிப்புணர்வுடன் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கொழும்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த குழு காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்க தீர்மானித்திருந்ததாக கூறப்படும் நிலையில் இறுதியில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்தே காலிமுகத்திடல் பகுதியிலுள்ள மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட குழுவொன்று இன்றைய தினம் சுதந்திர சதுக்க பகுதியில் சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் காலிமுகத்திடல் பகுதிக்கு படையெடுத்து மக்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை காட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.