ஞானசாரருக்கு இன்றிலிருந்து மீண்டும் 6 வருட சிறை! சற்று முன்னர் வெளியான உத்தரவு
புதிய இணைப்பு
பொது மன்னிப்பு பெறுவதற்கு முன்பு ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 வருட சிறைத் தண்டனை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு - 10:06AM(SL Time)
பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிற்கு அமைவாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு எதிராக அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிடியாணை தொடர்பில் தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இவ்வாறு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தற்போது சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர், இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
விளக்கமறியல்..
அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், அந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடியாணை தொடர்பான விவகாரத்திற்காக, தேரரை அடுத்த புதன்கிழமையன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்வதற்கான பிடியாணை நிலுவையில் இருந்தபோதிலும் தலைமறைவாக இருந்த கலகொட அத்தே ஞானசார தேரரை, களுத்துறை - தீனியாவல பகுதியில் உள்ள ஒரு காட்டு ஆசிரமத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.