பாசிசத்தை வெளிப்படுத்தும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி! கஜேந்திரகுமார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எம்மை அழைத்திருந்த நிலையிலே, ஜோசப் ஸ்டாலினும் தெற்கிலே ஜனநாயகத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்ற கைதிகளும் விடுவிக்கப்படாமல் நாங்கள் இந்த அரசாங்கத்தையோ, அதிபரையோ சந்திக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்ற ஒரு ஆட்சியே இன்று நடைபெறுகின்றது. மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை, நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றார். இது முழுமையாக மக்களை உதாசீனம் செய்கின்ற வகையில் நடத்தப்படுகின்றது.
பாசிசத்தை வெளிப்படுத்தும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி
இராணுவ பலத்தை பயன்படுத்தி பாசிசத்தை வெளிப்படுத்துகின்ற வகையிலே ஆட்சியை ரணில் விக்ரமசிங்க மேற்கொள்கின்றார். எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு முடிவெடுத்து இருக்கின்றோம்.
எதிர்வரும் பத்தாம் திகதி ஜனாதிபதியுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எம்மை அழைத்திருந்த நிலையிலே, ஜோசப் ஸ்டாலினும் தெற்கிலே ஜனநாயகத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்ற கைதிகளும் விடுவிக்கப்படாமல் நாங்கள் இந்த அரசாங்கத்தையோ அதிபரையோ சந்திக்கப் போவதில்லை.
அவர்கள் விடுவிக்கப்படும் வரை அனைத்து போராட்டங்களுக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.