இன மோதலை நோக்கிய அணுகுமுறையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து இன மோதலை நோக்கிய அணுகுமுறையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு முதன்முதலாக நான் நாடாளுமன்றத்தில் நுழைந்ததிலிருந்து ஒவ்வொரு பாதீட்டிலும் இந்த அமைச்சு குறித்து தலையிடுவதை ஒரு முக்கிய விடயமாகக் கொண்டுள்ளேன். ஏனெனில் - வெளியுறவு அமைச்சு என்பது இந்த நாட்டின் வரலாற்றில் - குறிப்பாக இன மோதல்கள் அதிகரித்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய அமைச்சுக்களில் ஒன்றாகும்.
தமிழர் போராட்டம்
கடந்த காலங்களில் பொய்கள் நிறைந்த அமைச்சகமாக இருந்து வருகின்ற வெளி விவகார அமைச்சு, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகிய இரண்டிலும் பாரிய குற்றங்களை மறைப்பதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட அமைச்சாகும். இந்த தீவில் தமிழர் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் என்று சித்தரிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தையே மேற்கொண்டுள்ளது. தற்போது கேள்வி என்னவென்றால் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து - அதில் ஏதேனும் ஒன்றையாவது மாற்றியுள்ளதா? என்பதும் இன மோதலை நோக்கிய அதன் அணுகுமுறையை மாற்றியுள்ளதா? குறிப்பாக - இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் கவலைகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டிய நாடுகள் வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு கையாண்டார்கள் என்பதும் - முக்கிய விடயமாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அல் ஹசைன் மனித உரிமைகள் கவுன்சிலுக்கான வீடியோ இணைப்பு மூலம் அறிக்கையொன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை. 2015 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைக்குப் பின்னரே 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் சபையில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது.
இலங்கையின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளரும் மதிக்கப்படும் நீதிபதியுமான உயர் ஸ்தானிகர் இவ்வாறு கூறுகிறார். "சில அரசியல் கட்சிகள், இராணுவம் மற்றும் சமூகத்தின் சில பிரிவுகளின் எதிர்ப்பையும் மீறி மனித உரிமை மீறல்களை விசாரித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு அரசாங்கம் இந்த சபையின் முன் அளித்த உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன்.
நம்பகமான அமைப்பு
துரதிஸ்டவசமான உண்மை என்னவென்றால் - இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பு தற்போது இந்த அளவு குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணையை நடத்தவோ அல்லது அத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கவோ தகுதியற்றது. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான நம்பகமான அமைப்பு இல்லை" என்று அவர் கூறுய பின்னர் சில விடயங்களைக் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக "இந்த அளவிலான சர்வதேச குற்றங்களை உள்நாட்டு சட்ட கட்டமைப்பு கையாள போதுமானதாக இல்லை" என்றும் கூறுகினார் அமைச்சரிடம் கொண்டு வர விரும்பும் மிக முக்கியமான விடயம் இதுவே என்றும் அவர் கூறுகிறார். தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் பல தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சிதைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாடு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகள் முழுமையான தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை அனுபவித்துள்ளன. ஆயுத மோதலுக்குப் பின்னர் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
வெளியுறவு அமைச்சின் கீழ் தனது வாதத்தை முன்வைத்து சர்வதேச நீதிபதிகள்இ வழக்குரைஞர்கள் - வழக்கறிஞர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் கலப்பு நீதிமன்றத்தை நிறுவ பரிந்துரைத்தது. இந்த முழு அறிக்கையையும் இப்போது இந்த அவையில் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இந்த அறிக்கைக்குப் பின்னரே 2015 நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களை அழைத்துக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க அந்தத் தீர்மானத்திலிருந்து பின்வாங்கினார்.
இலங்கையில் சர்வதேச தலையீடு
2015 நல்லாட்சி அரசாங்கம் என்பதை நான் ஏற்கவில்லை. அவர் தனது வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை கொண்டு அந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்க்கச் செய்திருந்தார். அப்போதைய வெளியுறவு அமைச்சர் அலிஸ் சப்ரி - 2023 ஜூலை 27 - அன்று இணை அனுசரணை அதிகாரிகளைச் சந்தித்தபோது. குறித்த தீர்மானத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் செயற்பட்டார்.
இலங்கையில் சர்வதேச தலையீடு மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரங்கள் இல்லாமல் செய்வதும் உறுதிப்படுத்தப்படுமாயின் செப்டம்பர் 4, 2024 அன்று அவர் நாடாளுமன்றத்தில் பரிந்துரைப்பது குறித்தும் அமைச்சர் உறுதியளித்தார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒருபோதும் வழக்குத் தொடரும் அதிகாரங்கள் இருக்காது.
ஆனால் அப்போது அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் விக்கிரமசிங்க உயர் ஸ்தானிகர் சேட் முன்வைத்த தீர்மானத்தை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை வைத்து மறுக்கிறார் அலி சப்ரி என்பவர் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபயா ராஜபக்ச இருந்தபோது ஆலோசகராக இருந்தவர். தற்போதும் வழக்குகள் தொடரப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது போரின் போது குற்றங்களில் ஈடுபட்ட ஒரு நபர் கூட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் குற்றமிழைத்த எவருக்கு எதிராகவும் நீதித்துறை நடவடிக்கைகள் இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் அதை பல தடவைகள் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் ஜனாதிபதியான பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்த போதும் அவர் அதே உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். இந்த சூழலில்தான் வெளியுறவு அமைச்சர் இம்முறை ஜெனீவா சென்று அவரும் தீர்மானத்தை எதிர்த்தார்இ அதற்கு பதிலாக உள்நாட்டு பொறிமுறையையே அவர் கோரியுள்ளார்.
அவர் போர்க்கால அட்டூழியங்களைச் சமாளிக்க ஒரு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையைக் கோருகிறார். நீங்கள் உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்பினால் அது உள்நாட்டு பொறிமுறையாக இருக்க முடியாது என்பது தெளிவானது. நீங்கள் உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்பினால், அந்த செயல்முறை நம்பகமானதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை அது குறைந்தபட்சம் உள்நாட்டு ரீதியாக இருக்க முடியாது.
இராணுவத் தீர்வு
அந்த விசாரணை செயல்முறைகளின் கட்டுப்பாடு சர்வதேச இயல்புடையதாக இருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அனுரா ஜே.வி.பி ஆதரவாளராக இருந்தார். இராணுவத் தீர்வு குறித்து அதன் தீவிர ஆதரவாளராக செயற்பட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவும் பல சந்தர்ப்பங்களில் இராணுவத் தீர்வை நியாயப்படுத்தி செயற்பட்ட ஜே.வி.பி க்கு பெருமை சேர்த்தவராவார்.
போருக்கு ஆதரவாக பொதுமக்களைத் திரட்டுவதற்கான செயற்பாட்டை உருவாக்கியது ஜே.வி.பி தான். முழுமையான போருக்கு ஆதரவாக இனவெறி என்றும் வகுப்புவாதம் என்றும் சொல்லாடல்களைப் பயன்படுத்தினார். சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கருத்து சொல்லியிருந்தார். இது ஒரு தூதுவருக்கு மிகவும் பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன். எனது பார்வையில் சீன தூதுவர் பாரம்பரியத்தை உடைத்து என்.பி.பிக்கு ஆதரவாக முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அறிக்கைகளை வெளியிட்டார். அவர் அந்தத் தேர்தல் முடிவுகளை விளக்கி என்.பி.பியின் ஆதரவை வரவேற்றார்.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் என்.பி.பி. 24வீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அவர்கள் ஆறு இடங்களில் மூன்று இடங்களைப் பெற்றிருக்கலாம் ஆனால் அவர்கள் 24 வீதமான வாக்குகளையே பெற்றனர். அப்படியானால், எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் என்.பி.பிக்கு வாக்களித்தனர் என்று சீனத் தூதுவர் தெரிவித்தார் இது சீன அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருக்குமென்று நான் கருதவில்லை.
அவர் இவ்வாறான கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்கக்கூடாது. இந்த அரசாங்கம் கலாச்சாரத்தை மாற்றுவதில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாக இருந்தால் - வெளியுறவு அமைச்சர் சீன தூதுவரிடம் உண்மையை கேட்க வேண்டும். ஏனெனில் அந்தக் கருத்து முற்றிலும் நியாயமற்றது. வேறு எந்த நாட்டினது தூதுவர்களும் இப்படிச் செய்வார்கள் என்று நான் கருதவில்லை.. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பிப்ரவரி 19 முதல் 23 வரை தேசிய இன விவகாரங்களுக்கான ஆணைக்குழுவின் அமைச்சர் த பான்யூ ஒரு பிரதிநிதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இலங்கைக்கான சீன கலாச்சார விவகார மையத்தை யாழ்ப்பாணத்தில் திறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த குறிப்பிட்ட அமைச்சு சீனாவில் இன சிறுபான்மையினருக்குப் பொறுப்பான அமைச்சாகும். இந்த விடயம் அமைச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும். முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளார். தேர்தல் முடிந்த உடனேயே சீனத் தூதர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
சீனாவின் சர்ச்சைக்குரிய அமைச்சகங்களில் ஒன்றான அமைச்சர் இலங்கைக்கு இரகசிய வருகைதந்திருந்ததுடன் சீன சிறுபான்மையினர் தொடர்பான அமைச்சர் இலங்கைக்கு வந்து சிறுபான்மையினரை சந்திக்காமல் புத்த சாசன அமைச்சை சந்தித்திருக்கிறார். புத்த சாசன அமைச்சு குறிப்பாக தொல்பொருள் துறை வடக்கு கிழக்கில் கலாச்சார இனப்படுகொலையை நடத்தி வருவதாக நாங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இவ்விடயம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.
இந்தியா அல்லது அமெரிக்கா போன்ற வேறு எந்த நாட்டினது அமைச்சர்கள் வந்து எங்கள் கடவுளுக்கு முதன்மையளித்திருந்தால் என்ன நடந்திருக்கும். அந்த அமைச்சர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் விமர்சித்திருப்பார்கள். ஆனால் சீன அமைச்சரும் ஒரு பிரதிநிதியும் வந்து போய்விட்டார்கள். ஆனால் எங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது.
குறிப்பாக தூதர் கருத்து தெரிவித்த விதம் மற்றும் இந்த குறிப்பிட்ட அமைச்சகம் சீனாவில் குற்றம் சாட்டப்பட்ட விதத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நாம் ஆய்வு செய்ய வேண்டும். அமைச்சர் இதன் பின்னணியில் உள்ள உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |