ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமானது! - அரச குடும்பத்தினர் உலக தலைவர்களுக்கு வரவேற்பு
ஜி-7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் கோவிட் பெரும் தொற்றுக்கு பின்னர் உலக தலைவர்கள் பலர் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு பிரித்தானியாவின் காா்ன்வால் மாகாணத்தில் இன்று ஆரம்பமாகியது. கடந்த 2 ஆண்டுகளில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வாயிலாக அல்லாமல் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் மற்றும் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காா்ன்வால் மாகாணத்தின் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள எழில் கொஞ்சும் காா்பில் பே பகுதியில் ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடு நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
முன்னதாக, இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை, ஜி 7 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த தலைவர்களை பிரித்தானிய அரச குடும்பத்தினர் வரவேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.