இலங்கை மீதான பெச்லட் அம்மையாரின் காட்டமான அறிக்கை! இன்று பதிலளிக்கிறது இலங்கை அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஆரம்பமானது.
இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்றைய அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார்.
காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக அவர் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கை தொடர்பில் நேற்று முன்வைத்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இன்று பதிலளிக்கவுள்ளார்.
உணவு பாதுகாப்பிற்காக ஒகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, சிவில் செயற்பாடுகளில் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் செயல் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் நேற்று தெரிவித்தார்.
மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் இன்றைய உரையில் தெளிவுபடுத்தவுள்ளார்.