அடுத்த வருடத்திற்கான சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அடுத்த ஆண்டு சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதன் மூலம் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் நியமனங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்று, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.