சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகை
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பேருந்து சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நாளைய தினம் (29.05.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு குறித்த பேருந்து சேவை ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் (28.05.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பேருந்து பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்
அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பேருந்து சேவையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டதாக மிலான் மிரென்டா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பரீட்சைகள் இடம்பெறும், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களது பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |