க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 3568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம் ஊழியர்கள் பணியில்
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நாளை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை(29.05.2023) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பேருந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |