இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை! மீள நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடாத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானம்
மேலும், தற்போதைய காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்து, அதன் பின்னர் உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, இன்று முதல் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நேற்றையதினம் தீர்மானித்திருந்தது.
இது தொடர்பில் நேற்றையதினம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிடுகையில்,
தற்காலிகமாக உயர்தரப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி மீளவும் பரீட்சைகள் ஆரம்பமாகும்.
இடைநிறுத்தப்பட்டுள்ள 27, 28, 29ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.