கேள்விக்குறியாகும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம்
ஈழத் தமிழ் பெண்களிடையே தன்னம்பிக்கை குறைந்து செல்வதை சமகால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அவர்களிடையே இருக்கும் தன்னம்பிக்கை குறைந்து செல்வதால் அவர்கள் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகம் பலவீனமான ஒரு காலத்தை நோக்கி நகர்கின்றது.
சூழலைப் புரிந்து அதற்கேற்ப பொருத்தமான முடிவுகளை எடுத்து செயற்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்படும் தோல்வியே தன்னம்பிக்கை குறைந்து செல்லக் காரணம்.
ஈழத்தமிழ் பெண்கள் போராட்ட காலத்தில் வெளிப்படுத்திய புத்திசாதுரியமான நடத்தைகளை இப்போது வெளிக்காட்டாத போக்கு ஈழத்தில் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
சமூக மாற்றம்
வளமான வாழ்வு பற்றிய நேரிய நோக்கற்ற போக்கு எல்லா தோல்விகளுக்கும் காரணமாகிப் போகின்றதை சமகால நிகழ்வுகளை ஆராயும் போது அறிந்து கொள்ள முடிகின்றது.
முடிவுகளால் ஏற்படும் துயரமான வாழ்வை உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடையே இருக்கின்றது.அந்த உணர்வு அவர்களை தோல்வியின் வலியை அனுபவிக்க வைத்து விடுகின்றது.அதனால் தங்களால் இயலாது என்று எண்ணிக் கொண்டு, தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.
இதிலிருந்து மீண்டு வர சிலர் மீண்டு மீண்டும் முயன்ற போதும் , தோல்விகளையே காண்கின்றனர். பொருத்தமற்ற வழிமுறைகளிலேயே அவர்களது மீள் முயற்சிப்புக்கள் இருப்பதால் வெற்றி சாத்தியமற்றதாகிப் போகின்றது.இதன் மூலம் பெற்ற தங்கள் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு இனி தங்களால் முடியாது என்ற அவநம்பிக்கைக்கு தள்ளப்படுகின்றனர்.
வளர்ந்து வரும் இளம் சமூகத்தினருக்கு தங்களின் அனுபவங்களின் அடிப்படையில் வழிகாட்டத்தலைப்படுகின்றனர்.இதன் விளைவு ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பலவீனமான ஓர் சமூகம் தோன்ற வழிகோலும் என்பது திண்ணம்.இது எதிர்கால ஈழத்தமிழர்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது.
சரியான புரிதல்
சமகாலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களிடையே ஏற்பட்டுவரும் பொருத்தமற்ற சூழல் புரிதல்களைக் கருத்தில் எடுத்து விரைவாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
2009 க்கு முன்னர் இருந்த பொருளாதார சூழல்களிலும் சரி, சுய பாதுகாப்பிலும் சரி, அவர்கள் மிகவும் பலமான சூழல் புரிதல்களை வெளிக்காட்டி இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், சிறந்த வழிகாட்டல் ஆலோசனைகளையும், தங்கள் சார்ந்த சமூகத்தினருக்கு வழங்கியிருந்தனர். சவால்களை இலாவகமாக எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருந்த பல நிகழ்வுகளை தேடலின் போது அறிய முடிந்தது.
அந்த நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட பெண்களை கண்டு உரையாட முடிந்ததன் மூலம் அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையின் பலத்தை தற்காலத்தில் வெளிக்காட்டப்படும் தன்னம்பிக்கை வெளிப்பாட்டோடு இலகுவாக ஒப்பிட்டுக்கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் சமூகம் தாய்வழி சமூக உறவுக்கு அதிகமாக முன்னுரிமையளித்து வருவதோடு, பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய பல முடிவுகளுக்கான புரிதல்களை குடும்பங்களில் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பொறுப்பைப் பெற்றதாக குடும்பக்கட்டமைப்பைப் பெற்றிருப்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம்.
இதனாலேயே ஈழத்தமிழர்கள் தங்களின் எதிர்கால சமூகத்தை பலம்மிக்க வலுவான சமூகமாக பேணிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும். சூழலுக்குப் பொருத்தமான சூழல் மாற்றங்களின் புரிதல்களுக்கேற்ப ஈழத்தமிழ்ப்பெண்களால் எடுக்கப்படும் முடிவுகள் மிகச்சரியானவையாக இருக்கும்படி பேணவேண்டும்.
ஒரு வழி
ஈழத்தமிழ் பெண்களிடையே தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்ளும் படியான நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் விளைவுகளை நன்கு அறிந்துகொள்ளும் படி செய்தல் வேண்டும்.
பொருத்தமற்ற எண்ணமாற்றத்தை ஏற்படுத்தும் தொடர் நாடகங்களில், வெட்டிப் பேச்சில் நேரத்தைக் கழிக்கும் இயல்பில் வீட்டில் உள்ள மூத்த பெண்கள் ஈடுபடும் போது இளையவர்களும் அதன் வழித்தடத்திலேயே பயணப்பட தூண்டப்படுவார்கள்.
அலுவலக பணிகளில் ஈடுபடும் பெண்களிடையேயும் இவ்வியல்புகளை அவதானிக்க முடிகின்றது.
எனினும் பொருத்தப்பாடான வெளிப்பாடுகளை குறைந்த வீதத்திலான ஈழத் தமிழ்ப் பெண்கள் வெளிக்காட்டி வருகின்றனர்.அவர்களிடையே ஆரோக்கியமான விளைவுகள் மட்டுமல்லாது ஏனையோருக்கு நல்ல முன்னுதாரணமாகவும் கூட அவை இருப்பதையும் இன்றைய ஈழத்தில் அவதானிக்க முடியும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும்.
ஈழப்போராட்ட வரலாற்றில் இருந்து ஈழத்தமிழ்ப் பெண்களின் வீரமிகு துணிகர செயற்பாடுகளையும் , அதில் அவர்களின் முடிவெடுக்கும் ஆற்றலையும் , சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்காக அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையின் வீரியத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
சுதந்திரப் பறவைகள், நாற்று, விழுதுமாகி வேருமாகி, குருதிச் சுவடுகள் போன்ற எழுத்தாவணங்களில் இருந்து அன்றைய ஈழத்தமிழ்ப் பெண்களின் தன்னம்பிக்கை வெளிப்பாடுகளுக்கும் இன்றைய ஈழத்தமிழ்ப் பெண்களின் தன்னம்பிக்கை வெளிப்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியும் என்பதும் நோக்கத்தக்கது.
ஆய்வின் நோக்கு
இன்று பெரும்பாலான ஈழத்தமிழ் பெண்களிடையே பொருத்தப்பாடான சூழல் புரிதல்கள் இல்லை என்பதும் அவர்களது முடிவெடுக்கும் ஆற்றல் பொருத்தமற்றதாக இருப்பதும் அது வளமான வாழ்வுக்கு பொருத்தமற்ற விளைவுகளை தந்திருப்பதனையும் சமகால நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்தி, 2009 க்கு முன்னரான காலத்தில் இதே காரணிகளின் விளைவுகளோடு ஒப்பிட்டு அவதானங்களை பகுப்பாய்வுக்குட்படுத்தியதன் மூலம் முடிவு காணப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஈழப்போராட்ட வரலாற்றில் பங்கெடுத்த பெண்கள் எதிர்கொண்ட சில சவால்களை எடுத்துரைத்து அதனோடு தொடர்புடைய நிகழ்வுகளை விவரித்து மேற்கொண்ட மாதிரி பரிசோதனை முயற்சிகள் நல்ல முடிவுகளை தந்திருந்தன என்பதையும் குறிப்பிடலாம்.அதன்பால் பெற்ற முடிவுகளைக் கொண்டே இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.
விழுதுமாகி வேருமாகி நூலில் வரும் தமிழவளின் நிகழ்வும் பெரஸ்யெவ் எழுதிய உண்மை மனிதன் நூலில் வரும் ரஷ்ய விமானப்படை வீரரின் நிகழ்வும் ஒத்துப்போகும் இயல்பை கொண்டுள்ளது.
இரு களங்களும் நேரங்களும் வேறுபட்ட போதும் நிகழ்வு ஒத்திருக்கிறது.எதிரியின் எல்லைக்குள் காலில் காயப்பட்ட நிலையில் நடக்க முடியாத சூழலில் ஊர்ந்து பல நாட்களாக போராடி தங்கள் படைகளின் எல்லைக்குள் தப்பி வந்து காயங்களில் இருந்து மீண்டு மீளவும் போர்க்களம் சென்று போராடி வீரமரணமடையும் இந்த இருவீரர்களில் தமிழவள் ஈழத்தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதிரிப் பரிசோதனை
இந்த மாதிரிப் பரிசோதனை முயற்சிக்கு பயன்படுத்திய தமிழவளின் கதை நூலாசிரியரின் மொழி நடையிலேயே இங்கு குறிப்பிட்டுள்ளது. கட்டளை கிடைக்கவில்லை என்பதால் அணிவரத் தாமதமாகிவிட்டது.அவர்கள் வீதிக்கு வலது புறமுள்ள வெளியான பகுதியில் மிகவும் சிரமப்பட்டுத்தான் வந்து சேர்ந்தார்கள்.
கமலினியின் அணி வந்து சேர இருண்டு விட்டது.பிறகுதான் பார்த்தால், தமிழவளைக் காணவில்லை.காயப்பட்ட தமிழவளை முன்னதாகவே பின்னுக்கு அனுப்பியிருந்தோம்.அணிகளை அனுப்பி நாலைந்து நாட்கள் தேடினோம்.ஐந்தாம் நாள் பல சிரமங்களின் பின் அவர் வந்து சேர்ந்தார்." என்று தமிழவளின் அன்றைய ஐந்து நாள் போராட்டத்தின் பின் மீண்டு வந்தது பற்றிய கதையை அணித்தலைவராக இருந்த ஆனந்தி குறிப்பிடுகின்றார்.
விழுதாகி வேருமாகி என்ற நூல் தமிழவளின் அனுபவங்களை ஒரு பகுதியாக கொண்டுள்ளது.இது மாலதி படையணியின் போரியல் வரலாற்றை பேசும் நூலாகும்.இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவர் இந்த நிகழ்வுகளை அதில் பின்வருமாறு விவரித்துள்ளார்.
தமிழவளின் அனுபவம்
60 மி.மீ எறிகணை செலுத்தியுடன் சாவகச்சேரிக்குச் சென்ற தமிழவள், அத்தாக்குதல் நேரத்தில் முன்னரங்க நிலையிலே நின்றிருந்தார்.எல்லா அணிகளும் பின்னகர்ந்த போது ஆனந்தியின் அணியுடன் இணைந்து வந்து கொண்டிருந்தார் அவர்.மக்களின் குடியிருப்புக்களைக் கடந்து தச்சன்தோப்பு வெளியினுள் இறங்கி ஊர்ந்துவரத் தொடங்கியபோது தான் இராணுவம் இவர்களைக் கண்டு தாக்கத் தொடங்கியது.எழுந்து நின்றால் முழங்காலை மட்டுமே மறைக்கக்கூடிய அந்த வயற் பகுதியினுள் வரப்புக்களைக் காப்பாகப் பயன்படுத்தி நிலையெடுத்துத் தாக்குதலைச் செய்துவிட்டு பின்னகர்ந்தனர்.
வெடிபொருட்கள் முடியத் தொடங்கியிருந்தன. அதனால் வரம்பு , சேறு, பற்றை எல்லாவற்றையும் கடந்து வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் செய்த பதில் தாக்குதலையடுத்து முன்னேறுவதை நிறுத்திய இராணுவம் அப்பகுதியை நோக்கிச் சுடத்தொடங்கியதுடன், ஐயம் ஏற்படுகின்ற இடங்களுக்கெல்லாம் எறிகணைத் தாக்குதலைச் செய்தபடியிருந்தது.
அந்நேரம் மலர்விழி, தமிழவள் ஆகியோர் காயமுற்றதுடன் அனைவரும் சிதறத்தொடங்கினர்.வானத்தில் 'ஆளில்லா வேவு விமானம் ' சுற்றிக்கொண்டிருக்க, ஒவ்வொருவரும் தம்மை மறைத்துக்கொண்டு நகரமுற்படவும் அவர்களிடையேயான தொடர்பும் இல்லாமற்போனது.அந்நேரம் இருள் நிலத்தைக் கவ்வத் தொடங்கவும், எல்லாத் திசைகளிலும் ஆயுதங்களின் வெடித்தல் ஒலியைத்தவிர வேறேதும் கேட்கவில்லை.இதனால் இராணுவமோ, எம்மவரோ எங்கே என்பதையே கண்டுபிடிக்க முடியாதிருந்தது.
காயமுற்ற தமிழவள் சிறிது தூரம் வந்ததும் மயங்கிப் போனார்.இன்னமும் இராணுவம் அமைதியடையவில்லை.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் கழிந்து போயிருந்தது.மெல்லக் கண் விழித்தவருக்குச் சற்றுத் தூரத்தே தமக்குள் கதைத்துச் சிரித்தபடி இராணுவம் சென்றுகொண்டிருந்தது தெரிந்தது.கையிலிருந்த குண்டைப் பிடித்தபடி புல்லுக்குள் இன்னும் தன்னை மறைத்துப் படுத்திருந்தார்.வானத்தில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நிலா அழுது கொண்டிருந்தது.
காயமுற்று முறிந்து நரம்புகளில் தொங்கிக்கொண்டிருந்த காலின் வலியால் ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது.
' மற்றவை என்ன கஸ்ரப்பட்டுக்கொண்டு எங்க நிக்கினமோ' என்ற நினைவே துணிவைத் தர, மீண்டும் முன்னேறினார்.சேற்று நீர் பட்டுக் காயம் எரிந்தது.இடதுகால் அசையவே மறுத்தது.எனினும் மனம் மட்டும் 'அநியாயமாகச் சாகக்கூடாது 'என்ற வைராக்கியத்துடன் இருந்தது.நாட்களை எண்ணியபடியே அவர் வந்துகொண்டிருந்தார்.
எதையுமே நின்று அவதானிக்க முடியாத நிலையிலே, எறிகணைச் சத்தங்களின் மூலம் மட்டுமே எமது பகுதி இதுவாகத்தான் இருக்குமென ஊகிக்க முடிந்தது.அப்பகுதியை நோக்கினார்.கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதனையும் காணமுடியவில்லை.வெயில் உரக்க முன் தொடர்ச்சியாக ஊர்ந்து, பின் சற்று ஓய்வெடுத்து வயிற்றினுள் நீரை நிரப்பி, மீண்டும் நகர்ந்து... இப்படியே நேரம் நகர்ந்து, பொழுது கடக்க நான்காம் நாள் காலை விடிந்தது.
இப்போது இராணுவத்தின் பகுதியைக் கடந்து இரு தரப்புக்கும் இடைப்பட்ட பகுதியுள் வந்திருந்தார் தமிழவள்.இவர் வந்து சேரவும் விடியவும் சரியாக இருந்தது.சிறிது தூரம் தான் நகர்ந்திருப்பார், கடகடவென எறிகணைகள் வந்து வீழத்தொடங்கின.சுற்றிச் சுற்றி வீழும் எறிகணைகளுக்குப் புல்லுப் பற்றைக்குள்ளா பாதுகாப்பு தேட முடியும்?
எங்கோ உயரத்தில் நின்று இராணுவம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.அதற்கேற்ப புற்களின் மறைப்பினூடாக வரத்தொடங்கினார்.அன்று மாலையே எமது முன்னரங்க நிலைக்குச் சற்று முன்னதாக வந்து சேர்ந்தவரைக் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போராளிகள் கண்டு மீட்டனர்.ஐந்து நாட்களாக வயல்களில் தேங்கிக்கிடந்த நீரைத் தவிர எதையுமே நுகர்ந்தகராத அவர் மிகுந்த சிரமத்துடன் வந்து சேர்ந்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |