காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரது தாயாரின் இறுதிச் சடங்கு: குழப்பத்தை தோற்றுவித்த கும்பல்
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரைப் பெற்றெடுத்த தாயாரது இறந்த உடலை பரந்தன் மயானத்தில் தகனம் செய்ய விடாது அடாவடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் இழிவு செயலால் கிளிநொச்சி பரந்தனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி(Kilinochchi) - பரந்தன் சிவபுரம் கிராமத்தில் வசித்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட போராளியான குன்றவையனின் (சி.சிவரஞ்சன்) தாயாரான சி.யோகம்மா (74 வயது) திடீர் மாரடைப்புக் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார்.
குழப்பத்தை தோற்றுவித்த கும்பல்
இந்நிலையில், மரணமடைந்தவரது உடலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் கும்பல் ஒன்று பரந்தன் பகுதியில் நடைபெறும் மரண வீடுகளுக்கு வருபவர்களிடம் தாம் பணம் சேகரித்து வருவதாகாவும் அந்த பணத்தில் சிறுதொகையைத் தமது நிர்வாகச் செலவுகளுக்கா எடுத்துவிட்டு மிகுதியை மரணமடைந்தவர்களது உறவினர்கள் விரும்பினால் அவர்களிடம் வழங்குவதாகவும் கூறி மரண வீட்டிற்கு வருபவர்களிடம் பணம் சேகரிக்க முற்பட்டுள்ளனர்.
இதனை அனுமதிக்க மறுத்த மரண வீட்டாருடன் முரண்பட்டதுடன் வீட்டில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என அடாவடிக்கும்பல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மரண சடங்கில் கிராம மக்களை பங்கு பற்ற வேண்டாம் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, பரந்தன் கோரக்கன்கட்டு மயானத்தில் கடந்த 26 ஆம் திகதி பெறும் போராட்டத்திற்கு பின்னர் மரணமடைந்த தாயாரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பரந்தன் கிராம சேவையாளர் இது வரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விடயம் கிளிநொச்சி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு( S. Shritharan) தெரியும் எனவும் அவரும் மரணச் சடங்கிற்குச் சென்றுவிட்டு முன்னதாகவே சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |