2023 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த தயார்! தேர்தல் ஆணையகம் அறிவிப்பு
2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் இலக்குடன் ஆணையகம் தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தேர்தல் ஆணையாளர்; எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகள் இருப்பதால், தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தங்களுக்கு நிதிப் பிரச்சனை எதுவும் இல்லை என்று புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.
ஒக்டோபர் 31ஆம் திகதியன்று, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் மூலம் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் புதிய தலைவர் மற்றும் இயக்குநர்கள் அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்படும் வரை, இடைக்கால அடிப்படையில் சாதாரண பணிகளை தொடர சுயாதீன ஆணைக்குழுக்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்று புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் 2022 வாக்காளர் பதிவேட்டை தேர்தல் ஆணையகம் சான்றளித்து முடித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களைக் கொண்ட துணைப் பட்டியலைத் தயாரிப்பதில் தேர்தல் ஆணையகம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி 2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேடு நவம்பர் நடுப்பகுதிக்குள் முடிக்கப்படும். இதனையடுத்து 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தமுடியும் என்றும் புஞ்சிஹேவா கூறினார்.
புதிதாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையகமாக இருந்தாலும் சரி அல்லது தற்போதுள்ள ஆணையகமாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி உள்ளூராட்சி தேர்தலை நடத்தி 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் 340 உள்ளுராட்சி அமைப்புகளும் நிறுவப்பட வேண்டும்.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை பிரதமரால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட 'தேசிய எல்லை நிர்ணய குழு' தலைவரும், தேர்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, தனது குழுவின் செயல்பாடுகள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 8,000 லிருந்து 4,000 ஆகக் கொண்டுவரும் நோக்கத்துடன் உள்ளாட்சிகளின் எல்லை நிர்ணயம் செய்யும் அறிக்கையை சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு பெப்ரவரி 28 வரை தங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமது பணிகள் தேர்தல் ஆணையகத்தின் முன்னெடுப்புக்களை பாதிக்காது என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.