பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலர் டெல்டா தொற்றினால் பாதிப்பு!
இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் டெல்டா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பின் அதன் சமீபத்திய கோவிட் -19 புதுப்பிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட மக்கள் எந்தவிதமான தடுப்பூசிகளை பெறாதவர்களைப் போல் டெல்டா மாறுபாடினை எளிதாகப் பரப்ப முடியும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 2 வரை, டெல்டா மாறுபாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1,467 பேரில் 55.1 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 34.9 சதவீதம் அல்லது 512 பேர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
"சுதந்திர தினம்" என்று அழைக்கப்படும், ஜூலை 19ம் திகதி பிரித்தானியாவில் அமுலில் இருந்து கோவிட் கட்டுப்பாடுகளில் கணிசமானவை தளர்த்தபட்டது.
அத்துடன், பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து தடுப்பூசிகளும் பெறுநர்கள் இரண்டு அளவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் வயது வந்த மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் பேர் இன்றுவரை தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், "கோவிட் -19 ஏற்படக்கூடிய கடுமையான நோய் அபாயத்திலிருந்து நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க தடுப்பூசி எங்களது சிறந்த கருவியாகும்" என்று இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாகி ஜெனி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், தடுப்பூசிகள் அனைத்து ஆபத்தையும் கட்டுப்படுத்தாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கோவிட் -19 உடன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட வழிசெய்யும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் மேலும் 31,808- பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 92 பேர் உயிரிழந்துள்ளனர்.