180 மில்லியன் டொலரை செலுத்த முடியாத நிலைமை:4 நாட்களுக்கு மேல் கடலில் நிற்கும் எரிபொருள் கப்பல்கள்
இலங்கை இறக்குமதி செய்யப்பட்டுள்ள எரிபொருளை ஏற்றிய நான்கு கப்பல்களுக்கு 180 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அந்த கப்பல்கள் கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல், பெற்றோல் ஆகியவற்றை ஏற்றிய இரண்டு கப்பல்கள், கச்சாய் எண்ணெயை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ்வாறு நங்கூரமிடப்பட்டுள்ளன.
கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை
இந்த கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லாத காரணத்தினால், கப்பல்களுக்கு தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் 40 ஆயிரம் மெற்றி தொன்னுக்கு மேற்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் இருப்பதாகவும் அந்த கப்பல்களில் உள்ள எரிபொருளை எப்படியாவது பெற்றுக்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சு, நிதியமைச்சுடன் சில முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
10 ஆம் திகதிக்கு முன்னர் விடுவித்திருந்தால் தட்டுப்பாட்டுக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைத்திருக்கும்
எனினும் கப்பல்களில் இருக்கும் எரிபொருளை இறக்குவதற்காக இதுவரை டொலர்களை ஒதுக்காத காரணத்தினால், இந்த இரண்டு கப்பல்கள் நான்கு நாட்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த டீசல் மற்றும் பெற்றோலை எடுத்து வந்துள்ள இரண்டு கப்பல்களை கடந்த 10 ஆம் திகதி முன்னர் விடுத்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ஓரளவுக்கேனும் தீர்வு கிடைத்திருக்கும் என அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.