கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: என்.எம்.ஆலம்
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது கடற்றொழிலாளர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது என கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் கடற்றொழில் அமைச்சருக்கு பொருத்தமான ஒரு இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (09.04.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மானியம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையிலே ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்ற உரையின் போது, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அஸ்வெசும பயனாளிகளுக்கான தற்போதைய அசாதாரண நிலை குறித்துப் பேசியிருந்தார்.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் நிலை காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, விலை ஏற்றங்கள் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விகிதத்தில் எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இது கடற்றொழிலாளர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. ஒரு கடற்றொழிலாளராகவும், குடும்பத் தலைவனாகவும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.