பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு!
பிரித்தானியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெற்றோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 2p மேல் உயர்ந்து அதன் மிகப்பெரிய நாளாந்த உயர்வைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கமான ஒரு குடும்பக் காரில் பெற்றோல் நிரப்புவதற்கான சராசரிச் செலவு இப்போது £99.40 என்றும், விரைவில் £100ஐத் தாண்டும் என்றும் RAC மோட்டார் குழு தெரிவித்துள்ளது.
பல குடும்பங்கள் நெருக்கடியில்
இந்நிலையில், உணவு மற்றும் எரிசக்தி கட்டணங்களும் அதிகரித்து வருவதால், பல குடும்பங்கள் நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலின் சராசரி விலை செவ்வாயன்று லிட்டருக்கு 180.73p உயர்ந்துள்ளது என்று RAC தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டீசலின் சராசரி விலை ஏறக்குறைய 1.5p உயர்ந்து லிட்டருக்கு 186.57p என்ற சாதனையை எட்டியது, இதனால் 55 லிட்டர் குடும்பக் காரை நிரப்புவதற்கான செலவு £102.61 ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம், வாகன ஓட்டிகளின் செலவுகளைக் குறைக்க உதவும் வகையில், எரிபொருள் வரியில் லிட்டருக்கு 5p குறைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
இருப்பினும், சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைப்பை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.