எரிபொருள் கையிருப்பு தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகிய நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவினால் புதிய எரிசக்தித் துறை அமைச்சராக அருண கருணாதிலக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரஷ்யாவுடனான ஒப்பந்தம்
இந்த நிலையில், நாட்டின் தற்போதை எரிபொருள் கையிருப்பு மற்றும் நெருக்கடி நிலை குறித்து அவர் ஊடகங்களிடம் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் திட்டமிட்டுள்ள இலங்கை, அதற்கான பணத்தை சீனாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரென்மின்பியில் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதே எனது உடனடி நோக்கமாகும்.

இந்த வருடம் ஜூலை மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட தடையற்ற விநியோகத்திற்கான வழிமுறைகளை நாங்கள் வகுப்போம்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.